ஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்
ஆன்லைன் மோசடியில் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடி சம்பவங்களும் புது, புது விதமாக நூதனமுறையில் அரங்கேறி வருகிறது. சமூகவலைதளத்தில் வலைவீசும் மோசடி கும்பலின் வலையில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகிறார்கள். பொதுமக்களிடம் இயல்பாக இருக்கும் ஆசையை தூண்டிவிட்டு லாபம் அடையும் இந்த கும்பல் எங்கிருந்து செயல்படுகிறது. இதன் பின்னணி என்ன?. அப்பாவி மக்கள் இந்த கும்பலிடம் எப்படி சிக்குகிறார்கள் என்பதை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அனைத்து தரப்பினரிடமும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் மூலம் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களில் இல்லத்தரசிகள், மாணவ-மாணவிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர். பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை காட்டிலும் சமூகவலைதளங்களில் உலாவுவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குறுஞ்செய்தி அனுப்பி மோசடி
ஆற்றில் மீன்களுக்கு வலைவீசுவதுபோல சமூகவலைதளங்களில் உலாவும் அப்பாவி மக்களிடம் பணம் கறக்க மோசடி கும்பல் வலைவீசுகிறார்கள். இதில் சிக்குபவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்துவிடுகிறார்கள். சமீபகாலமாக வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அறிமுகமாகும் மோசடி பேர்வழிகள் தங்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணிபுரிந்து வருவதாகவும், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் கூறி கொள்கிறார்கள். விலையுயர்ந்த கார், பங்களா வைத்து இருப்பதாகவும் கூறுவார்கள்.
சுங்கத்துறையில் இருந்து அழைப்பு
பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த குறுஞ்செய்திகளை அனுப்பி நன்மதிப்பை பெற்றுவிடுகிறார்கள். அதன்பிறகு விலையுயர்ந்த பரிசுபொருளை அனுப்பி வைப்பதாகவும், அந்த பரிசு பொருளில் வெளிநாட்டு பணமும் இருக்கும் என கூறி ஆசையை தூண்டிவிடுகிறார்கள். இதை நம்பி விலையுயர்ந்த பரிசு பொருளுக்காக காத்திருக்கும் அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் செல்போன் அழைப்பு வரும். அப்போது எதிர்முனையில் பேசும் மர்ம ஆசாமி, விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் முகவரிக்கு விலையுயர்ந்த பார்சல் வந்து இருப்பதாகவும், அந்த பார்சலை நீங்கள் பெற வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என்றும் கூறுவார். மேலும், தொகையை செல்போன் மூலம் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும் அறிவுறுத்துவார். இதை நம்பி ரூ.30 ஆயிரம் வரை வரி செலுத்துவீர்கள்.
சைபர்கிரைம் உதவி எண்
பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதால் அதை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும். அதற்கான அரசின் அனுமதி பெற ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறுவார். அதன்பிறகு மேலும் ஒரு காரணத்தை கூறி பணம் கேட்பார்கள். இப்படியே கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கறந்துவிடுவார்கள். ஆனாலும் விலையுயர்ந்த அந்த பார்சல் வீடு வந்து சேராது. இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், படித்தவர்கள் கூட இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருவதாகவும் சைபர்கிரைம் போலீசார் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்படும் பொதுமக்கள் சைபர் கிரைம் உதவி எண்-1930-வில் புகார் செய்யலாம் என்றும், இணையவழியில்https://cybercrime.gov.inமூலம் புகார் அளிக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.
திருச்சி பெண்ணிடம் கைவரிசை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதேபோல் ஏமாற்றி ரூ.2½ லட்சம் வரை அபகரித்து உள்ளனர். திருச்சியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் கடந்த வாரம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், தாங்கள் இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும், தங்களுடைய மகளுக்கு பிறந்தநாள் என்றும், அதை கொண்டாடும்விதமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு சேவையாற்ற நினைப்பதாகவும் கூறி உள்ளனர்.
இதற்காக ரூ.28 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து பணத்துடன் கூடிய பார்சல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் கூறி முகவரியை வாங்கி உள்ளனர். அதன்பிறகு சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2½ லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.
புதிய செயல்திட்டம்
இங்கிலாந்தில் இருந்து குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிவித்த மர்ம ஆசாமி, அந்த குறுஞ்செய்தியை தமிழில் அனுப்பி இருப்பது தான் வேடிக்கையின் உச்சம். பணத்தை இழந்த பிறகு தான் இதன் விபரீதத்தை உணருகிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் கந்துவட்டி கொடுமை, கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா புழக்கம், ரவுடியிசம் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
அதேநேரம், ஆன்லைன் மூலம் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகளை தடுக்க தீவிரம் காட்ட வேண்டும். சமூகவலைதளங்களில் உலாவும் இதுபோன்ற மோசடி கும்பலை வேரோடு களையெடுக்க புதிய செயல்திட்டம் வகுக்க வேண்டும். இதில் கணினியில் சிறப்பாக பணியாற்றக்கூடிய மென்பொறியாளர்களை களம் இறக்கினால் மட்டுமே அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.