நாய்கள் துரத்தியதால் காயம்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான்


நாய்கள் துரத்தியதால் காயம்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான்
x

நாய்கள் துரத்தியதால் காயம் அடைந்த புள்ளிமான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்தது. அதனை வனத்துறையினர் மீட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் இக்பால் (வயது 65), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டின் அருகே நேற்று காலை புள்ளிமான் ஒன்று துள்ளி குதித்து ஓடி வந்தது. அப்போது நாய்கள் துரத்தியதால் அந்த மான் திடீரென இக்பால் வீட்டிற்குள் நுழைந்து ஒரு அறைக்குள் புகுந்தது. அந்த புள்ளி மான் ரத்தக்காயத்துடன் இருப்பதை பார்த்த இக்பால் குடும்பத்தினர் அதற்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் மான் வெளியே செல்லாத வகையில் அந்த அறையை பூட்டினார்கள். பின்னர் கறம்பக்குடி ேபாலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மானின் வாயிலிருந்து ரத்தம் கொட்டிய படி இருந்ததால் கால்நடை டாக்டருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினர் பூட்டி இருந்த அறையை திறந்து ரத்தக்காயத்துடன் இருந்த புள்ளிமானை மீட்டனர். தொடர்ந்து அந்த மானுக்கு காட்டாத்தி கால்நடை டாக்டர் இதயதுல்லா தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் அந்த புள்ளிமானை வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் பொதுமக்கள் உதவியுடன் ஏற்றி புதுக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்கு பின்னர் மான் வனப்பகுதிக்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story