17,218 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 17,218 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 17,218 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆசிரியர் தின விழா
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி வரவேற்று பேசினார். செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், தர்மபுரி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று வருகிறது. மாணவர்களிடம் சமத்துவம், சகிப்புத்தன்மை, உதவும் மனப்பான்மை ஆகிய நற்பண்புகளை பள்ளிகளில் வளர்க்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களுடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. படிப்போடு உடல் நலனை மேம்படுத்த விளையாட்டுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும் என்று பேசினார்.
தகைசால் பள்ளி
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு காரணமாக உள்ள ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பள்ளிகளில் சமத்துவம் முழுமையாக இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு ஆண்டில் 1 லட்சத்து 8 ஆயிரம் மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தில் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 17,218 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 75 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 146 பயனாளிகளுக்கு ரூ.69,80,734 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் வழங்கினர். தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 9 ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கில் 3 பேரை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், சப்தகிரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் வீரமணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், ராஜா அண்ணாமலை, ரவி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.