அட்டகாசத்தில் ஈடுபடும்புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு


அட்டகாசத்தில் ஈடுபடும்புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது.

புலி அட்டகாசம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வனப்பகுதிகளை ஒட்டியபடி சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புக்குள் புகுந்து தொடர்ந்து புலி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

மாடு, 2 ஆடுகளை கடித்துக் கொன்றும், ஒரு மாட்டை கடித்து குதறியும் காயத்தை ஏற்படுத்திய புலி ஒரு நாயையும் கவ்வி சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கூண்டு வைக்கப்பட்டது

இதற்கிடையே புலியின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்டறிய ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த கேமராக்களில் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். அதே சமயத்தில் புலியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததாலும், பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையிலும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி முதற்கட்டமாக மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்பு பகுதியில் புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டின் பக்கம் புலி வரவே இல்லை.

மேலும் ஒரு கூண்டு

இந்தநிலையில் மல்லமுத்தன் கரை அருகே புரையிடம் என்ற பழங்குடியின குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு புலியின் நடமாட்டத்தை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று புலியின் கால்தடங்களை பார்வையிட்டு உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் நேற்று சிற்றாறு குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு கூண்டு வைத்தனர். இந்த கூண்டு ஏற்கனவே மூக்கறைக்கல் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டை விட மிகப் பெரியது.

மேலும் கூண்டு தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், "புலிக்கு வைக்கப்படும் கூண்டுக்குள் சிறிய கூண்டு ஒன்று இருக்கும். இதில் ஒரு ஆடு கட்டப்பட்டிருக்கும். இந்த ஆட்டை அடிக்க புலி பாய்ந்து கூண்டுக்குள் வரும் போது, அந்த கூண்டு தானாக பூட்டிக் கொள்ளும். அதே வேளையில் கூண்டுக்குள் சிக்கிய புலியால் ஆட்டையும் பிடிக்க முடியாதபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

இதுதொடர்பாக களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் கூறுகையில், "புலியை பிடிக்கும் வகையில் தற்போது 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் தங்களது கால்நடைகளை திறந்த வெளியில் விடக் கூடாது. கால்நடைகளை மேயவிட்டால் புலி கூண்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் ஆட்டை அடிக்க வராமல் வெளியில் மேயும் கால்நடைகளை அடித்துக் கொண்டு சென்று விடும்" என்றார்.


Next Story