வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
தெப்பக்காடு-மசினகுடி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
தெப்பக்காடு-மசினகுடி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம்
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் சில சமயங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகிறது.
இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் முதுமலை, மசினகுடி சாலையோரங்களில் வனவிலங்குகள் வந்து நிற்பது வழக்கம். சில சமயங்களில் சாலையில் செல்லும் வாகனங்களை காட்டு யானைகள் விரட்டுவது வாடிக்கை. இதனால் வனத்தில் வாகனங்களை நிறுத்த வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வனத்துறை அறிவுரை
இந்த நிலையில் முதுமலை தெப்பக்காடு-மசினகுடி சாலையில் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சில சமயங்களில் புள்ளி மான்கள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் குறைந்த வேகத்தில் ஓட்டி செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி உள்ளிட்ட இடங்களில் வனவிலங்குகள் சாலையில் நடமாடுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது. வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது. மேலும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.