சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சோலையாறு அணை
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பின்னர் அவ்வபோது மழை பெய்து வந்தது. ஜூன் மாதத்தில் சில நாட்கள் மட்டும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியது. நீர்வரத்து அதிகரித்ததால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து சோலையாறு அணையில் இருந்து மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். மேலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாததால் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் 2 நாட்களாக நிறுத்தப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி முதல் வால்பாறையில் மீண்டும் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் வால்பாறையில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர் மழையின் காரணமாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் கருமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி சோலையாறு அணைக்கு வினாடிக்கு 1401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் மேல்நீராறு அணையில் இருந்து சுரங்க கால்வாய் வழியாக 609 கனஅடி வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 90 அடியாக இருந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதேபோல கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 2 நாட்களாக காலை, மாலை நேரங்களில் சாரல் மழை பெய்தது. நேற்றும் இதேபோல சாரல் மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாரல் மழையால் கிணத்துக்கடவு பகுதியில் இதமான சூழல் நிலவி வருகிறது.
மழையளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மேல் நீரார்-52, சோலையாறு அணை-49, கீழ் நீரார்- 40, வால்பாறை- 19.