வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் வெள்ளக்காடாக மாறியது.
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் வெள்ளக்காடாக மாறியது.
நீர்வரத்து அதிகரித்தது
கர்நாடகா மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 34 ஆயிரத்து 723 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறி உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
அறிவுறுத்தல்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.