சுயதொழில் தொடங்க மானியத்தொகை உயர்வு
சுயதொழில் தொடங்க மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவதன் மூலம் தொழில் வளர்ச்சியை பெருக்கி, அதன் மூலம் வேலையின்மை சிக்கலை தீர்க்கும் விதமாக, நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.ஈ.ஜி.பி. ஆகிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் உதவி பெற அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு ஆண்களுக்கு 35 ஆகவும் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வரம்பு பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 ஆகவும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்து பயன்பெறலாம்
அதுமட்டுமின்றி, யூ.ஒய்.ஈ.ஜி.பி. திட்டத்தின் கீழ் வாணிகம், விற்பனை புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட திட்டத்தொகை உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் திட்டத்தொகையில் 25 சதவீதம் என்ற வகையில் ரூ.3.75 லட்சம் வரை வழங்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாட்டினை சீராய்வு செய்து மதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செய்துள்ள இந்த மாற்றங்கள் தரும் வாய்ப்பினை பயன்படுத்தி, ஆர்வமும் தகுதியும் கொண்டோர் நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.ஈ.ஜி.பி. உள்ளிட்ட சுயதொழில் கடனுதவி திட்டங்களின் கீழ் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ, 04146-223616, 9443728015 ஆகிய தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.