ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பு
கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
எடப்பாடி:-
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு ஆடு, கோழி, புறா, சண்டை சேவல் மற்றும் வளர்ப்பு மாடுகள், பசுக்கள், வேளாண் பணிக்கான எருதுகள் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று. நடைபெற்ற சந்தையில் ஆடு, கோழிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து இருந்தது. மேலும் ஆடு மற்றும் கோழிகளின் விலையும் சற்று உயர்ந்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இறைச்சிக்கான 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இதே போல் சுமார் 3 கிலோ எடையுள்ள சேவல் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் வழக்கத்தை அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது.