அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குமரியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றார்-2 அணை பகுதியில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றார்-2 அணை பகுதியில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூலை மாதம் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அப்போது பலத்த காற்றும் வீசியதால் நாகர்கோவில் உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
அதே சமயத்தில் மலையோரம் மற்றும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
அணையில் 5¾ அடி உயர்வு
இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 23.25 அடியாக இருக்கிறது. இதேபோல் மற்ற அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 339 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 20 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 914 கனஅடி நீர்வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 225 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
நேற்றுமுன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 641 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று அது 225 கனஅடியாக குறைக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 8.6 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 70 கனஅடி நீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 103 கனஅடி நீரும் வருகிறது.
மழை அளவு
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் ஒழுகினசேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 21.2, பெருஞ்சாணி அணை- 17.4, புத்தன் அணை- 18, சிற்றார் 1- 30.6, மாம்பழத்துறையாறு அணை- 3, முக்கடல் அணை- 17.2, பூதப்பாண்டி- 22.4, கன்னிமார்- 17.2, கொட்டாரம்- 4.6, குழித்துறை- 11, மயிலாடி- 7.4, நாகர்கோவில்- 8.4, சுருளக்கோடு- 12.4, தக்கலை- 5.2, இரணியல்- 4, மாம்பழத்துறையாறு- 3, திற்பரப்பு- 18.2, பாலமோர்- 30.2, ஆரல்வாய்மொழி- 10.2, அடையாமடை- 13.2, முள்ளங்கினாவிளை- 10.8 என பதிவாகி இருந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார்-2 அணை பகுதியில் 34.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திற்பரப்பு அருவி
மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குளுகுளு என சீசனுடன் காணப்படுவதால் நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் மேல் பகுதியில் தடுப்பணைக்கட்டில் உல்லாச படகு சவாரி செய்ததை காணமுடிந்தது.