தற்கொலைக்கு தூண்டினாரா? நடிகை சித்ரா கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலை செய்ய தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், குற்றப்பத்திரிகையை திருவள்ளூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ரத்து செய்ய கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடத்தையில் சந்தேகம்
காமராஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம், "டி.வி. சீரியலில் உடன் நடிக்கும் நடிகருடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது. செல்போனில் யாரிடமும் பேசக்கூடாது என்று ஹேம்நாத் கடும் கட்டுப்பாடுகளை விதித்து சித்ராவை கொடுமை செய்துள்ளார். அவர் நடிகை என்று தெரிந்து அவரை காதலித்து திருமணம் செய்து விட்டு, அடுத்த சில நாட்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் 'இப்படி வாழ்வதற்கு பதில் அவள் செத்து போய் விடலாம்' என்றும் கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து வீடு வந்ததும் ஏராளமான கேள்விகளை கேட்டு, சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, மனுதாரர் அவரை கொடுமை செய்துள்ளார். அதனால்தான் தாங்கிக்கொள்ள முடியாத மனவேதனையில் இந்த விபரீத முடிவை சித்ரா எடுத்துள்ளார்" என்று வாதிட்டார்.
பிரச்சினை இல்லை
ஹேம்நாத் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், "சித்ராவை திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத் மிகவும் மகிழ்ச்சியுடன்தான் வாழ்ந்தார். சித்ராவின் வருமானத்தை நம்பி அவரது பெற்றோர் இருந்தனர். திருமணத்துக்கு பின்னர் வருமானம் தடைபட்டதால், மகளை தேவையில்லாமல் அவரது தாயார் திட்டி, கொடுமை செய்துள்ளார். ஒருபோதும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை இல்லை.
சித்ரா தற்கொலை செய்த நாளில் அவரது தாயார்தான் அதிக முறை போனில் பேசி கொடுமை செய்துள்ளார். வரதட்சணை கொடுமையோ, வேறு எந்த கொடுமையோ நடக்காத பட்சத்தில் மனுதாரர் தேவையில்லாமல் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். அவர் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
ரத்து செய்ய மறுப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. இங்கு அவர் தரப்பில் செய்யப்பட்ட வாதங்கள் அனைத்தையும் வழக்கை விசாரிக்கும் திருவள்ளூர் கோர்ட்டில் முன்வைத்து நிவாரணம் பெறலாம்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.