தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி
தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடியில் ஆங்காங்கே மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடந்து கொண்டே இருந்தன. அதே போன்று தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
கையெழுத்து இயக்கம்
இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேரணி பாளையங்கோட்டை ரோடு, தமிழ்ச்சாலை, வ.உ.சி. சாலை, பீச் ரோடு வழியாக ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தது. பேரணியில் போலீசார் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.