தேனி மாவட்டத்தில்வெள்ளை ரக பட்டு கூடுகள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டு கூடுகள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடி மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கோலார் கோல்டு (மஞ்சள்), ஒயிட் (வெள்ளை) என 2 ரக பட்டு கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் வெள்ளை ரக பட்டு குறிப்பிட்ட பருவ நிலைக்கு ஏற்ப உற்பத்தியாகும்.
இந்த ரக பட்டு கூடுகளுக்கு சந்தைகளில் அனைத்து நாட்களிலும் கடும் கிராக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒயிட் ரக பட்டுக்கூடு 80 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை பட்டுக்கூடு வளர்ப்புக்கு மிதமான பருவநிலை முக்கியமானதாகும். மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளை ரக பட்டு கூடு கோவை, ஒசூர், கர்நாடக மாநிலம் ராம்நகர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பட்டு கூடு உற்பத்தி விவசாயி கூறுகையில், நான் 1 ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்துள்ளேன். இதன் மூலம் 80 அட்டைகள் வரை வளர்க்கலாம் முட்டை வைத்த 30 நாட்களில் புழுக்கள் நன்றாக வளர்ந்து விடும். வழக்கமான நாட்களில் 80 முட்டைகள் வளர்த்தால் 60 முதல் 70 கிலோ வரை கூடுகள் உற்பத்தியாகும். தற்போது கடும் பனிப்பொழிவு, ஊசி ஈ மற்றும் சுண்ணாம்புக்கல் நோய், மல்பெரி இலைகளில் சாம்பல் நோய் தாக்குதலால் உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒயிட் ரக பட்டு கூடு தற்போது ரூ.600 முதல் 700 வரை கூடுகளின் தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.