கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
மனு அளிக்க வந்த பெண்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் கலெக்டர் அரவிந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.
நாகர்கோவில் கேப் ரோடு பகுதியைச் சேர்ந்த வினி (வயது 45) என்பவரும் தனது மகன், மகளுடன் மனு அளிக்க வந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த பையில் மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டி போன்றவை மறைத்து வைத்திருந்தார்.
தீக்குளிக்க முயன்றார்
வினி திடீரென தான் பையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டியை கையில் எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர் விரைந்து வந்து வினியின் கையில் இருந்த தீப்பெட்டியை தட்டி விட்டார். தொடர்ந்து அவர் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிக்க முயன்றார். இதனால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து வினியை பிடித்தனர். தொடர்ந்து அவர் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வினி, ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாகவும், வாங்கிய பணத்தை திரும்பி கொடுத்த பிறகும், அந்த வாலிபர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கூறினார்.
திடீர் பரபரப்பு
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை அழைத்துச் சென்று மேற்கண்ட கோரிக்கை தொடர்பான மனுவை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வழங்க ஏற்பாடு செய்தனர். இந்த மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் பெண் தீ குளிக்க முயன்ற சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரின் உடமைகளையும் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.