ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
ஈரோடு சின்னசேமூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகள் ஜெசிந்தா (வயது 21). டிப்ளமா பார்மசி படித்து விட்டு, மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும், ஈரோடு கனிராவுத்தர்குளம் முதலிதோட்டத்தை சேர்ந்த குருபிரகாஷ் மகன் அறிவழகன் (23) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அறிவழகன் பயோ மெனிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜெசிந்தாவும், அறிவழகனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அறிவழகனும், ஜெசிந்தாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் கோவை சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்க அலுவலகத்தில் சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், ஜெசிந்தா வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் இருவரின் பெற்றோரையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஜெசிந்தாவை அவரது கணவர் அறிவழகனுடன் செல்ல அனுமதித்தனர்.