புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமனார் கைது


புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமனார் கைது
x

அரக்கோணம் அருகே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

புதுப்பெண் தற்கொலை

அரக்கோணத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஸ்டீபனின் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இந்தநிலையில் ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர்- மாமனார் கைது

ராஜேஸ்வரியின் தற்கொலைக்கு அவரது கணவர் ஸ்டீபன், மாமனார் செல்லையா மற்றும் மாமியார் ராணி ஆகியோர்தான் காரணம் என ராஜேஸ்வரியின் தாய் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என ராஜேஸ்வரியின் உறவினர்கள் நேற்று முன்தினம் அரக்கோணம் - திருவள்ளூர் சாலையிலும், அரசு மருத்துவமனை எதிரிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் கணவர் ஸ்டீபன், மாமனார் செல்லையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மாமியார் ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story