கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.32¼ கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம் வினியோகம்: கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.32¼ கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம் வினியோகம்: கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.32¼ கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.32 கோடியே 39 லட்சம் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வாழ்வாதாரம்

தூத்துக்குடி மாவட்டம் வடக்கே வேம்பாரில் இருந்து தெற்கே பெரியதாழை வரை 163.5 கிலோ மீட்டர் நீளம் உள்ள கடற்கரையை கொண்டுள்ளது. இதில் 21 மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 25 மீனவர் கூட்டுறவு சங்கங்களும், 26 மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும், 4 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இவைகளில் 55 ஆயிரத்து 95 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்டத்தில் 321 மீன்பிடி இழுவலை படகுகளும், 226 தூண்டில் மற்றும் செவுள் வலை படகுகளும், 3 ஆயிரத்து 558 எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளும் இயங்கி வருகின்றன. இந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

உதவித் தொகை

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 07.05.2021 முதல் 31.8.2023 வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 784 மீனவ குடும்பங்களுக்கு ரூ.32 கோடியே 39 லட்சம் நிவாரணத் தொகையும், மீன்பிடிப்பு குறைவு காலங்களில் மீனவர்களுக்கு சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 72 ஆயிரத்து 322 மீனவ குடும்பங்களுக்கு ரூ.41 கோடியே 13 லட்சம் சிறப்பு நிவாரண உதவித்தொகையும் வழங்கப்பட்டு உள்ளது.

மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் 67 ஆயிரத்து 607 மீனவர்களுக்கு ரூ.30 கோடியே.43 லட்சம் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகையும், மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து 647 மீனவ மகளிருக்கு ரூ.31 கோடியே 99 லட்சம் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு உள்ளது.

ஆழ்கடல் மீன்பிடித்தல்

மேலும், ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 22 மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளும், பாரம்பரிய மீன்பிடி கலன்களை எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் 491 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் மானியத்தொகையும், பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகு மற்றும் இதர உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 42 மீனவர்களுக்கு ரூ.84 லட்சம் மானியத் தொகையும் வழங்கப்பட்டு உள்ளது.

கடல்பாசி வளர்ப்பு மானியம்

மீனவ மகளிருக்கு கடல்பாசி வளர்ப்புக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 94 மீனவ மகளிருக்கு ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 400 மானியத் தொகையும், குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 21 மீனவர்களுக்கு ரூ.95 லட்சம் நிவாரண தொகையும், காணாமல் போகும் மீனவர்களது குடும்பத்துக்கு தின உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 10 மீனவர்களுக்கு ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் தின உதவித்தொகையும் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story