வருங்காலத்தில் திருச்சி தொகுதி பா.ஜ.க.வுக்கு என்ற நிலை ஏற்படவேண்டும்-முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
திருச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் வருங்காலத்தில் திருச்சி தொகுதி பா.ஜ.க.வுக்கு என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பா.ஜ.க. அலுவலகம் திறப்பு
தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கட்சி அலுவலகங்கள் கட்டும் பணி நடைபெற்றது. திருச்சியில் கோர்ட்டு பாலத்தை அடுத்துள்ள புத்தூர் கஸ்தூரிபுரத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் அருகே பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகம் கட்டப்பட்டது. அதில், அலுவலக அறை, கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்சிங் அறை என பல்வேறு வசதிகளுடன் 3 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்ட இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த அலுவலகத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சரித்திரம் படைக்க வேண்டும்
கடந்த 1997-ம் ஆண்டு பா.ஜ.க. மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. அதற்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்களை அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டேன். அப்போது மாவட்ட தலைவராக இருந்த பழனியப்பனிடம் இது குறித்து தெரிவித்தேன். அவரும் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். பின்னர் அவரிடம் இடம் தேர்வு செய்து விட்டீர்களா? என்று கேட்டேன். நமது வீட்டிலேயே நடத்தி கொள்ளலாம் என்றார். அங்கு எல்லோருக்கும் இடம் போதுமா? என்றேன். ஆனால் அவர் போதும் என்றார். அந்த சிறிய வீட்டில் கூட்டம் நடந்தது. அந்த வீட்டில் இருந்த ஹால்கூட நிறையவில்லை. அதுதான் அன்றைய பா.ஜ.க.வின் நிலை.
பின்னர் 1998-ம் ஆண்டு ரெங்கராஜன் குமாரமங்கலம் திருச்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு, நடத்திய பாராட்டு கூட்டத்தில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரே வருடத்தில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது. தற்போது நமது கட்சிக்கு பெரிய அலுவலகம் எல்லாம் கட்டி உள்ளோம். அதற்கு எல்லாம் வேர்களாக இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் கட்சியை வழிநடத்தி சென்றவர்கள். நாளை நமது தலைமுறை நம்மை பற்றி புகழ வேண்டுமானால் நீங்கள் சரித்திரம் படைத்தாக வேண்டும். இனி வருங்காலத்தில் திருச்சி தொகுதி எவருக்கும் இல்லை. அது பா.ஜ.க.வுக்கு மட்டும் தான் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் வரவேற்றார். முடிவில் தென்னூர் மண்டல்தலைவர் பரஞ்சோதி நன்றி கூறினார்.