தந்தையை கொன்று டிரம்மில் அடைத்து புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன், பூந்தமல்லி கோர்ட்டில் சரண்


தந்தையை கொன்று டிரம்மில் அடைத்து புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன், பூந்தமல்லி கோர்ட்டில் சரண்
x

தந்தையை கொன்று டிரம்மில் அடைத்து புதைத்துவிட்டு தலைமறைவான மகன், பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொட்டையடித்து சுற்றித்திரிந்தார்.

சென்னை

சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் குமரேசன் (வயது 76). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவர், கடந்த 19-ந்தேதி திடீரென மாயமானார். அவரது படுக்கை அறை முழுவதும் ரத்த கரையாக, துர்நாற்றம் வீசியபடி இருந்தது.

இதுபற்றி குமரேசனின் மகள் காஞ்சனமாலா அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குமரேசனை, அவருடைய மகன் குணசேகரன்(45) கொலை செய்து, உடலை டிரம்மில் போட்டு அடைத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் புதைத்துவிட்டு தலைமறைவானது தெரிந்தது.

காவேரிப்பாக்கத்தில் புதைக்கப்பட்ட குமரேசனின் உடலை போலீசார் ேதாண்டி எடுத்து பிரேத பரிேசாதனை நடத்தினர். மேலும் தலைமறைவான குணசேகரனை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தந்தையை கொன்று விட்டு 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்த குணசேகரன், பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

குணசேகரன் போலீசில் சிக்காமல் இருக்க பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் தங்கி இருந்ததும், அங்கு கொடுத்த அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரிந்தது. மேலும் போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தலையை மொட்டையடித்துவிட்டு, மொட்டை தலையுடன் கோவில் கோவிலாக சுற்றித்திரிந்துள்ளார்.

சரண் அடைந்த குணசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவரிடம் விசாரித்த பிறகுதான் தந்தை குமரேசன் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story