மரப்பாலம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டிய 17 வீடுகள் இடித்து அகற்றம்
ஈரோடு மரப்பாலம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 17 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஈரோடு மரப்பாலம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 17 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு வீடுகள்
நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி, 4-வது மண்டலத்துக்கு உள்பட்ட மரப்பாலம் நேதாஜி வீதியில், பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து 30 வீடுகள், 2 சிறிய கோவில்கள் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வசித்து வந்தவர்களிடம் வீட்டை காலி செய்யும்படி மாநகராட்சி சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் அங்கு வசித்தவர்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தோடு அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளும் ஒதுக்கப்பட்டன. கடந்த ஒரு ஆண்டு்க்கு முன்பு 13 பேர் வீடுகளை காலி செய்ததால் அந்த வீடுகள் மட்டும் அப்போது இடித்து அகற்றப்பட்டன. 17 பேர் வீடுகளை காலி செய்யாததால் அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் சிலர் காலி செய்த பின்னரும் தேவையற்ற பொருட்களை வீடுகளில் போட்டு வைத்திருந்தனர்.
இடித்து அகற்றம்
இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் 17 வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்களை உடைமைதாரர்கள் அகற்றி கொண்டனர். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், 4-ம் மண்டல உதவி ஆணையாளர் சண்முக வடிவு ஆகியோர் முன்னிலையில் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின்னர், பெரும்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கும் என்றும், மரப்பாலத்துக்கு வலது புறம் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள 20 வீடுகள் விரைவில் இடித்து அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.