குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - 9 பேர் கைது


குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - 9 பேர் கைது
x

குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

குன்றத்தூர் அடுத்த கோவூர் ராயல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்த நிலையில் வீட்டை வாங்குவதற்கு கணவன், மனைவி இருவர் முன்பணம் கொடுப்பதற்காக வந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை தாக்கி கை, கால்களை கட்டி காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், இன்ஸ்பெக்டர் ராஜி, சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர்.

அப்போது சுரேஷ்குமாரை காரில் கடத்தி செல்லும் காட்சி கள் பதிவாகி இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து சொகுசு காரில் ஒரு ஆணும், பெண்ணும் தனியாக செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த கார்களின் பதிவு எண்களை கொண்டு காரின் உரிமையாளர்கள் யார் என்று விசாரித்தபோது சொகுசு காரில் வந்த நபர் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த ராஜராஜன், அவரது மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜராஜனை பிடித்து விசாரித்தபோது சிதம்பரத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் கூறியதன் பேரில் வீட்டை வாங்குவது போல் வந்து சுரேஷ்குமாரை கடத்தியதாக தெரிவித்தார்.

இதையடுத்து சேலம் ஆத்தூரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமாரை தனிப்படை போலீசார் நேற்று மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக முத்துசாமி (39), ராஜராஜன் (52), ரவிராஜன் (31), அரவிந்த்ராஜ் (32), அரவிந்தன் (27), பாபு (40), மணிகண்டன் (25), பிச்சமுத்து (51), ராஜசேகர் (35) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 கார்கள், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரேஷ்குமார் இலங்கையை சேர்ந்தவர். இவரது தம்பி தம்பிலா மூலம் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள், இருடியம், ரைஸ் புல்லிங் உள்ளிட்ட பல்வேறு மோசடி தொழில்கள் செய்து வந்த நிலையில் இவர்களுடன் சிதம்பரத்தை சேர்ந்த முத்துசாமி பழக்கமாகி இவர்களுடன் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இந்த தொழிலுக்கு முத்துசாமி அதிக அளவில் பணம் கொடுத்து லாபம் சம்பாதித்த நிலையில் போதைப்பொருள் விற்ற பணத்தை சுரேஷ்குமாரின் தம்பியான தம்பிலா மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பணத்தை மோசடி செய்த தம்பிலாவை, முத்துசாமி தேடி வந்த நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியாததால் சுரேஷ்குமார் கட்டுப்பாட்டில் தம்பிலா உள்ளதாக கருதி சுரேஷ்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ்குமார் தனக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.

இதனால் சுரேஷ்குமாரை பிடித்து பணத்தை வாங்க வேண்டும் என்பதற்காக முத்துசாமிக்கு பழக்கமான ராஜராஜனை அவரது மனைவியுடன் சேர்ந்து அந்த வீட்டை விலைக்கு வாங்குவது போல் நடித்து முதலில் வீடு பார்ப்பதற்காக அனுப்பியுள்ளார். ராஜராஜனும் அவரது மனைவியுடன் வீட்டை வாங்குவது அங்கு சென்று பார்த்துவிட்டு வீடு பிடித்து விட்டதாகவும் நேற்று முன்தினம் வீட்டை வாங்க முன்பணம் கொடுப்பதாக கூறி இருவரும் சொகுசு காரில் அந்த வீட்டுக்கு வந்த போது சுரேஷ்குமார் அங்கு வந்துள்ளார்.

அப்போது முத்துசாமி தனது ஆட்களுடன் வெளியில் இருந்து வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே சென்று பேசி கொண்டிருந்த சுரேஷ்குமாரை தாக்கி கை, கால்களை கட்டி கடத்தி சென்றது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

போதை பொருள் விற்பனையில் மோசடி செய்த நபரிடமிருந்து தனது பணத்தை வாங்குவதற்காக அவரது அண்ணனை கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த கடத்தலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story