அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்


அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
x

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டில் அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டில் அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள்

தமிழகத்தில் முதல் முதலாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வித்துறை அலுவலகங்களில் ரூ.7 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

சபாநாயகர் அப்பாவு

திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

ஆங்கிலம் பயில...

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலம் பயில வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் எளிமையாக பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முதலாக ஒரு சட்டமன்ற தொகுதி முழுவதும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டது ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்தான். இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தலா 30 நிமிடம் வீதம் 3 பிரிவுகளாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இலவச சைக்கிள்கள்

இதனை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் தாளாளர்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியை உலக தரத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் எதிர்காலத்தில் உயரிய இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு நன்றாக படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பள்ளி-மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story