ஈரோடு காய்கறி மார்க்கெட்டில்இஞ்சி விலை உயர்வு
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் இஞ்சி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் இஞ்சி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
பீன்ஸ்
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி, சத்தியமங்கலம், ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தக்காளி, வெங்காயம் போன்றவற்றின் வரத்து அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதேசமயம் பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை அதிகரித்தது.
கடந்த வாரம் ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்தது. இதனால் நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனையானது.
விலை உயர்வு
இதேபோல் இஞ்சியின் வரத்தும் குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது, நேற்று ரூ.140-க்கு விலைபோனது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், "பெங்களூரு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், தாளவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு இஞ்சி வருகிறது. கடந்த சில நாட்களாக வரத்து குறைந்ததன் எதிரொலியாக விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. வரத்து அதிகமாகும் சமயத்தில் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது", என்றார்.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
கருப்பு அவரை - ரூ.90, பட்டை அவரை - ரூ.60, பச்சை மிளகாய் - ரூ.80, பெரிய வெங்காயம் - ரூ.20, சின்ன வெங்காயம் - ரூ.40 முதல் ரூ.50, முட்டைகோஸ் - ரூ.20, காலிபிளவர் - ரூ.30, பீட்ரூட் - ரூ.50, கேரட்- ரூ.60, முள்ளங்கி - ரூ.30, முருங்கைக்காய் - ரூ.40, பீர்க்கங்காய் - ரூ.70, பாகற்காய் - ரூ.55, புடலங்காய் - 40, வெண்டைக்காய் - ரூ.60, கத்தரிக்காய் -ரூ.60.