கடலூரில்மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை தொடக்கம்120 அணிகள் பங்கேற்கிறது
கடலூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை தொடங்குகிறது. இதில் 120 அணிகள் பங்கேற்கின்றன.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி விளையாட்டு போட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதில் இருந்தும் 120 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. போட்டியை மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தொடங்கி வைக்கிறார். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்குகிறார்.
விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2-வது பரிசாக ரூ.1 லட்சம், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம், 3-வது பரிசு ரூ.25 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நேற்று விழா நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை மாநகர செயலாளர் ராஜா ஆய்வு செய்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக் உடனிருந்தனர்.