1,258 வாக்குச்சாவடி மையங்களில் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,258 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும்பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,258 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும்பணி நடைபெற்றது.
ஆதார்எண் இணைப்பு பணி
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இதனையொட்டி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட 1,258 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் வாக்காளர்களிடம் படிவம் 6பி அளித்து தங்களின் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் சுய விருப்பத்தின் பேரில் இணைத்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 66 ஆயிரத்து 264 ஆகும். இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 965 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளனர். இது 38 சதவீதம் ஆகும். மீதம் உள்ள வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் அட்டையுடன் இணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆரணி
ஆரணியில் நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமினை வருவாய் கோட்டாட்சியர் எம். தனலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தாசில்தார் ஆர்.ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், குமரேசன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் பலரும் உடன் இருந்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பகுதியில் இந்து ஆரம்பப்பள்ளி, முஸ்லிம் தொடக்கப்பள்ளி மற்றும் புதுப்பேட்டை ஆரம்பப்பள்ளி நிகழ்ச்சி ஆகிய இடங்களில் ஆதார் கார்டு எண் மற்றும் வாக்காளர் அட்டை இணைப்பு முகாம் நடைபெற்றது.