கிராமமக்களிடம் இருந்து பெறும் மனுக்கள் மீது உடனடி தீர்வு
கிராமமக்களிடம் இருந்து பெறும் மனுக்கள் மீது உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை
செஞ்சி
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் நெகருன்னிசா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பேரூராட்சிமன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு செஞ்சி தாலுகாவில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசும்போது, தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் கிராம மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை கேட்டு வரப்பெற்ற மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோவிந்தராஜ், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மனோகரன், தலைமையிடத்து துணை தாசில்தார் உமா மகேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் குணசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் துரைச்செல்வன், தேர்தல் துணை தாசில்தார் செல்வமூர்த்தி, அரசு வக்கீல் தமிழ்ச்செல்வி கர்ணன், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.