பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வுகாண வேண்டும்
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வுகாண வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்
கள்ளக்குறிச்சி
கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷரவன் குமார் ஜடாவத் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? என வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். உரிய நேரத்தில் பணிக்கு வராத அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும் பதிவேடுகள் இருப்பு அறையில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது? எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளது? என தாசில்தார் விஜய்பிராபாகரன் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்து அதற்கான பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
உடனடி தீர்வுகாண வேண்டும்
பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சான்றுகள், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும். முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் தொடர்புடைய அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கி தீர்வு காண வேண்டும். புரோக்கர்கள் தாலுகா அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.அலுவலகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், அலுவலக கோப்புகளை முறையாக பராமரித்திடவும் அறிவுறுத்தினார்
புதிய குடும்ப அட்டை
தொடர்ந்து குடிமை பொருள் அலுவலகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய அட்டை வழங்குதல் மற்றும் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர் அலுவலகத்தின் வெளியே நின்ற பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதேபோல் நில அளவை அலுவலகத்துக்கு வெளியே நின்ற பொதுமக்களிடம் நில அளவை சம்பந்தமாக குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.