'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் - உளவுத்துறை எச்சரிக்கை


தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் - உளவுத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 May 2023 8:40 AM IST (Updated: 3 May 2023 8:51 AM IST)
t-max-icont-min-icon

'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

இந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலரில் கேரளாவில் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும், பெண்களை மதமாற்றம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து இருப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது உண்மை கதை என்றும் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் நடக்கவில்லை என்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கண்டனம் கிளம்பியது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கேரளாவில் வெறுப்பு பிரிவினை வாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழு நீக்கி ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் நாளை மறுநாள் (5-ந்தேதி) திரைக்கு வரும் நிலையில், கேரளாவில் தடை செய்யப்படுமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


Next Story