கார் மோதி கணவன்-மனைவி பலி; பெண் குழந்தை படுகாயம்
மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மானூர்:
மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கூலி தொழிலாளி
நெல்ைல மாவட்டம் மானூர் அருகே ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு மகிதா (3), மகிஸ்ரீ (1½) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று மதியம் மயில்ராஜ் தன்னுடைய மனைவி சுகன்யா, இளைய மகள் மகிஸ்ரீ ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.
கார் மோதியது
மானூர் ரஸ்தா அருகில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மயில்ராஜ், சுகன்யா, மகிஸ்ரீ ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தம்பதி பலி
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மயில்ராஜ், சுகன்யா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த குழந்தை மகிஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த அமீர் அஜ்மத்திடம் (58) விசாரித்து வருகின்றனர். மானூர் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.