சேலம் அருகே பரபரப்பு ரூ.70 லட்சம் கேட்டு ஓட்டல் உரிமையாளர் கடத்தல்; 2 பேர் கைது பெண் உள்பட 6 பேர் தலைமறைவு


சேலம் அருகே பரபரப்பு  ரூ.70 லட்சம் கேட்டு ஓட்டல்  உரிமையாளர் கடத்தல்; 2 பேர் கைது  பெண் உள்பட 6 பேர் தலைமறைவு
x

சேலம் அருகே ரூ.70 லட்சம் கேட்டு ஓட்டல் உரிமையாளர் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டார். பெண் உள்பட 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

சேலம்

சூரமங்கலம்,

ஓட்டல் உரிமையாளர்

சேலம் சூரமங்கலத்தை அடுத்த புதுரோடு, ெரயில் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது41), இவர் சேலத்தில் ஓட்டல் நடத்தி வருவதுடன், பழைய கார்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சின்ன திருப்பதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சரண்யா என்பவரிடம் ரூ.24 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.17 லட்சம் வரை வட்டி கட்டி உள்ளார்.

அப்படி இருந்தும் சரண்யா, சுப்பிரமணியனிடம் வட்டியும், அசலும் சேர்த்து இன்னமும் ரூ.70 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். சுப்பிரமணியனோ, பணம் தர முடியாத நிலையில் இருந்துள்ளதாக தெரிகிறது.

கடத்தல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சரண்யா, ஜாகீர் சின்ன அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த டேவிட் என்ற உதயகுமார் (37), கன்னங்குறிச்சி ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த குமார் (31) உள்ளிட்ட 8 பேர் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது கடன் தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

சுப்பிரமணியனும், எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசி கொள்ளுவோம் என்று கூறியதாக தெரிகிறது. அப்படி இருந்தும் அந்த கும்பல், சுப்பிரமணியனை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றது.

குடும்பத்தினர் அதிர்ச்சி

சினிமாவை போல் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த சம்பவத்தை கண்டு சுப்பிரமணியனின் மனைவி அன்பரசி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்பரசி சூரமங்கலம் போலீசில், தன்னுடைய கணவர் சுப்பிரமணியனை, சரண்யா தரப்பினர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

2 பேர் கைது

இதற்கிடையே சுப்பிரமணியனை கடத்திய கும்பல், காரிலேயே ஆங்காங்கே சுற்றி திரிந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சூரமங்கலம் கந்தம்பட்டி சுடுகாட்டு பகுதியில் காரை நிறுத்தி விட்டு அதில் சுப்பிரமணியனை வைத்திருந்தனர். இதனை அறிந்த சூரமங்கலம் போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த சுப்பிரமணியனை மீட்டனர்.

கடத்தல் தொடர்பாக டேவிட், அவருடைய நண்பர் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சரண்யா உள்பட 6 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவம் சூரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story