புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ேபராலயத்தில் ஆண்டுதோறும் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றம்

முன்னதாக நேற்று மாலை 5.45 மணிக்கு பேராலயத்தில் இருந்து கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கொடிக்கு முன்னால் வேளாங்கண்ணி மாதா தேர் சென்றது. கொடி ஊர்வலம் கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்றது.

பின்னர் கொடியை தஞ்சை மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் புனிதம் செய்து கொடியேற்றினர். சரியாக மாலை 6.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

திருப்பலி

அப்போது பேராலயத்தில் வண்ண மின்விளக்குகள் எரியவிடப்பட்டன. அதனைதொடர்ந்து வாணவேடிக்கைகள் நடைபெற்றன. அப்போது விழாவில் கலந்து கொண்டவர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

பெரிய தேர்பவனி

தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. மறுநாள் 8-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து மாலை கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

பாதுகாப்பு பணி

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் திரளானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தஞ்சை சரக டி. ஐ. ஜி ஜெயச்சந்திரன் தலைமையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் குளிக்க தடை

மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் யாரும் குளிக்காமல் தடுப்பதற்காக கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏராளமானோர் பங்கேற்பு

கொடியேற்ற விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ், ஆரோக்கியவின்டோ மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சகோதரிகள், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஆத்மா குழு உறுப்பினர் மரியசார்லஸ், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், சமூக ஆர்வலர் கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் வருவாய்த்துறையினர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story