தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
பென்னாகரம்:
தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் நேற்றும் அதே அளவில் நீர்வரத்து காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று குடும்பம், குடும்பமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு படையெடுத்து வந்தனர். ஒகேனக்கல்லில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.
போலீசார் கண்காணிப்பு
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் முதலை பண்ணை, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிபார்த்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
மேட்டூர், ஏற்காடு
இதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான மேட்டூர் அணை, ஏற்காட்டிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் சொந்த வாகனங்களில் வந்த நிலையில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இருப்பினும் அங்கு குளுகுளுவென இதமான சூழல் நிலவியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.