மல்லிகை விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.1000-க்கு விற்பனை
தொடர் முகூர்த்தம் எதிரொலியாக மல்லிகை விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.1000-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்,
தொடர் முகூர்த்தம் எதிரொலியாக மல்லிகை விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.1000-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிடுகிடு உயர்வு
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. இந்த பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரை யாகவும் பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வைகாசி மாதம் என்பதால் தொடர் முகூர்த்தம் மற்றும் கும்பாபிஷேக விழாவையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த விலையை விட பூக்களின் விலை 2 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் முகூர்த்த தினம் உள்ளிட்ட தொடர் விஷேசங்கள் காரணமாக அதிக அளவில் பூக்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். தேவை அதிகரித்து உள்ளதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் பூ வியாபாரி ஒருவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் பூ தேவையை மதுரையில் இருந்து வாங்கிதான் பூர்த்தி செய்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மல்லிகை கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரைதான் விற்பனையானது. தற்போது தொடர் முகூர்த்தம் என்பதால் கடந்த 3 நாட்களாக மல்லிகை ரூ.ஆயிரத்து 100 முதல் ரூ.ஆயிரத்து 200 வரை விற்பனையாகிறது.
விலை குறையும்
முல்லைப்பூ முன்பு ஒரு கிலோ ரூ.500 என இருந்தது தற்போது ரூ.700 என்றும், கனகாம்பரம் ரூ.400 இருந்தது தற்போது ரூ.ஆயிரமாக உயர்ந்து உள்ளது. அதிக விலை காரணமாக குறைந்தஅளவே மக்கள் வாங்குகின்றனர்.
திருவிழாக்களுக்கு தேவையான மாலை உள்ளிட்டவைகள் தவிர பிற தேவைகளுக்கு சிறிதளவு மட்டும் வாங்கி பயன் படுத்தி வருகின்றனர். முகூர்த்த தினம் குறைந்துவிட்டால் பூக்களின் விலை குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.