கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க ஐகோர்ட்டு அனுமதி
கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து, கலவரம் வெடித்தது. இதனால், அந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தை திறக்க அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், பின்னர், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதியளித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியில் அமைதியான சூழல் நிலவுவதாக கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகம் தரப்பில், எல்.கேஜி., முதல் 4-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மார்ச் முதல் வாரத்திலிருந்து பள்ளிக்கூடத்தை முழுமையாக திறக்கலாம். மழலை வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளுடன் பெற்றோரும் பள்ளிக்கு வர அனுமதியளிக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்தின் 3-வது தளத்துக்கு வைக்கப்பட்ட சீலை மட்டும் இப்போதைக்கு அகற்றக்கூடாது. நடப்பு கல்வியாண்டு முடியும் வரை பள்ளிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தொடர வேண்டும். இந்த பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.