அதிகனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!


அதிகனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 Dec 2023 12:00 AM IST (Updated: 18 Dec 2023 9:04 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது.

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விடுமுறை விடப்பட்டு இருப்பதால், இந்த மாவட்டங்களில் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடக்க இருந்த கணிதம் பாடத் தேர்வும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வும், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த கணிதம் பாடத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் என்ற அடிப்படையில் அரையாண்டு தேர்வு நடைபெறும் நிலையில், ரத்து செய்யப்பட்ட இந்த 6 மாவட்டங்களில் மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும். அதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story