மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
திருவண்ணாமலையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூாி மாணவர்களிடம் தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரில் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அண்ணா நினைவு தினமான கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரே மாதத்தில் ஆயிரம் கல்லூரிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 100 இடங்களில் நடத்தப்பட்டன.
இந்த கல்வி ஆண்டிலும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தமிழறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரிகளில் நான் முதல்வன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, அரசு கடனுதவி ஆலோனைகள் உள்ளிட்ட அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் மந்தாகினி வரவேற்றார். திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கலந்துரையாடலில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. முடிவில் கல்லூரி சார்பில் சையர் உசேன் நன்றி கூறினார்.