தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க அரசு உழைக்கும்: கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு


தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க அரசு உழைக்கும்: கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு
x

நகரங்கள் போல் கிராமங்களும் வளர வேண்டும் என்றும், தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும் என்றும் கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி, கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமைப்பை வலுப்படுத்த அதிகாரம்

மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

முழுமையான வளர்ச்சி

கிராம சபைகள் பல சிறப்பு செய்கைகளைச் செய்கிற வகையில், நலிந்தோர்க்கும், வறியோர்க்கும் உதவி செய்ய மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டிடவேண்டும். கல்விக்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகள் எல்லாவற்றிலும் கிராம சபைகள் முக்கிய பாலமாக இருக்க வேண்டும்.

கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லா பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படுகிற பணிகள் பொதுவானதாகவும், எல்லோரும் பயன்பெறும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.

மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்து வருகிறார்கள்.

பணப்புழக்கம் அதிகம்

விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தில் கிராமப்புற பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1,000 ரூபாய் என்பது அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்த திட்டம் வழிவகை செய்திருக்கிறது.

அனைத்துத் துறையும் வளர வேண்டும், அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது. கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.

கிராம சுயராஜ்ஜியம்

"ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்" என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டுவருகிறேன். அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாகவேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.

இன்று (நேற்று) அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். "இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது" என்று சொல்லி, 'கிராம சுயராஜ்ஜியம்' எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

திராவிட மாடல் அரசு

தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story