ரூ.17½ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.17½ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கூலித்தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மல்லையாபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது 35). கூலித்தொழிலாளி. கடந்த 2010-ம் ஆண்டு இவர், தனது மோட்டார் சைக்கிளில் கன்னிவாடியில் இருந்து மல்லையாபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அன்னக்கொடி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அன்னக்கொடியின் மனைவி கவுரி (30) வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் சண்முகசுந்தரம் வழக்கை நடத்தி வந்தார்.பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது.
அரசு பஸ் ஜப்தி
அதில் அன்னக்கொடி குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.12 லட்சத்து 79 ஆயிரத்து 600-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கவுரி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழகை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவகடாச்சம், அன்னக்கொடி குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்து 52 ஆயிரத்து 188 வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகும் இழப்பீடு வழங்கப்படாததால் கவுரி தரப்பில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சிவகடாச்சம், மதுரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய நேற்று உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டு ஊழியர்கள், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நெல்லைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.