இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் முத்துராமர். அவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு தங்களின் உறவினருக்கு குழந்தை பிறந்திருந்ததால் தேனியில் இருந்து ஒரு ஆட்டோவில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தங்களின் 9 மாத ஆண் குழந்தையையும் அழைத்துச் சென்றனர். தேனி அரண்மனைப்புதூர் விலக்கு அருகில் சென்ற போது, ஆட்டோ மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் குழந்தை பலியானது. இந்த விபத்துக்கான இழப்பீடு கேட்டு முத்துராமர், சுப்புலட்சுமி இருவரும் இணைந்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் மீதான விசாரணையை தொடர்ந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீட்டை 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் அரசு போக்குவரத்து கழகத்தால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையை தொடர்ந்து, இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்த நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டு பணியாளர்கள், தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அங்கிருந்து மதுரைக்கு செல்ல தயாராக நின்ற திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்தனர்.