அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: 12 பக்க கடிதம் சிக்கியது - தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பொம்மிடியை அடுத்த பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பள்ளியில் இருந்து மதியம் வீடு திரும்பிய அருண் பிரசாத், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பொம்மிடி போலீசார், அருண் பிரசாதின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் அருண் பிரசாத், எழுதிய 12 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் அவர், தனக்கு வீட்டு மனை நிலம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் குடும்பத்தினர்தான் தனது மரணத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுக்கு அருகே இருந்த மற்றொரு இடத்தை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்திய சிவசங்கர், 8 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, இடத்தை எழுதிக் கொடுக்காமல், மிரட்டி வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.