மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தகுதி
மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு வேட்டவலம் அரசு பள்ளி மாணவிகள் தகுதி பெற்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 23 பேர் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி சாருமதி 80 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டத்தில் முதலிடமும், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி கோபிகா 100 மீட்டர் ஓட்டத்தில் 3-வது இடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் 2-வது இடமும், 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டத்தில் முதலிடமும் பிடித்தார்.
4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவிகள் கோபிகா, ெரவிலா கேத்தரின், நிஷா, சுமேரா ஆகியோர் 2-வது இடம் பிடித்தனர். 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவிகள் கோபிகா, ரெவிலா கேத்தரின், பூமிகா, காவியா ஆகியோர் 2-வது இடம் பிடித்தனர்.
19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி கீர்த்திகா 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டத்திலும், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டத்திலும் முதலிடம் பிடித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மற்றும் 2-வது இடம் பிடித்த மாணவிகள் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை அனுராதா, உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில், முனீஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர்கள் சீனிவாசன், அந்தோணி குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.