அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
காலி பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தை சேர்ந்த மருந்தாளுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாங்கள் பணிபுரியும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணிபுரிந்தனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
மக்கள் நலன் கருதி 1,300-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை எம்.ஆர்.பி. வழியாக உடனடியாக நிரப்பிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவ விதி தொகுப்பின்படி கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக முறையான இட ஒதுக்கீடு நடைமுறையினை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் உள்ள 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மருந்தாளுனர்களை அரசாணைகள் (151, 299,69,20)-ன்படி உடனடியாக பணிவரன் முறை செய்திட வேண்டும்.
கொரோனா ஊக்கத்தொகை
46 துணை இயக்குனர் அலுவலக மருந்து கிடங்குகளில் மக்கள் நலன் கருதி மருந்தியல் சட்டம் 1948-ன்படி தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர், மருந்தியல் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க ேவண்டும். அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்கிட வேண்டும்.
மருந்துகளை உரிய வெப்பநிலையில் பராமரித்திட குளிர்பதன வசதியுடன் மருந்து கிடங்குகளை அமைப்பதுடன், மருந்து கணக்கு மேலாண்மை பணிக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் கூடுதல் வாய்ப்பு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.