அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்
1,300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
1,300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
காலிப்பணியிடங்கள்
மக்கள் நலன் கருதி 1300-க் கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ வீதி தொகுப்பின்படி கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக முறையான இடஒதுக்கீடு நடைமுறையினை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் உள்ள 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மருந்தாளுனர்களை அரசாணைகளின்படி உடன் பணிவரன் முறை செய்திட வேண்டும்.
கோரிக்கை அட்டை
46 துணை இயக்குனர் அலுவலக மருத்துவ கிடங்குகளின் மக்கள் நலன் கருதி மருந்தியல் சட்டத்தின்படி தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர், மருந்தியல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணியும் இயக்கம் நடத்தப்படும் அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
3 நாட்கள் நடக்கிறது
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதற்கு மாநில துணைத்தலைவர் பைரவநாதன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் விஸ்வேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட செயலாளர் தியாகராஜன், அமைப்பு செயலாளர் தியாகசுந்தரம், இணை செயலாளர் பழனிவேல் மற்றும் மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் 67 மருந்தாளுனர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கை அட்டை அணியும் இயக்கம் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.