அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் தகவல்


அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் தகவல்
x
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் 
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 7:37 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

கடலூர்

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில், பழைய மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் முதலிய 7 கலைகளில் 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி முழு நேரமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த இசைப்பள்ளியில் சேர ஆண்டு ஒன்றுக்கு ரூ.350 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது வரம்பு 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம் ஆகிய பயிற்சிக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனைய நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய துறைகளில் பயிற்சி பெற தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-2024-ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.400 வழங்க 2012-13-ம் ஆண்டு முதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ்-பாஸ், அரசு விடுதி வசதி, சலுகைக் கட்டணத்தில் ரெயில் பயண வசதி அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

3 ஆண்டு சான்றிதழ் படிப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களாக...

இங்கு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குரலிசை ஆசிரியர்களாகவும், பரதநாட்டிய ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இசைப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் நாதஸ்வர கலைஞராகவும், தவில் கலைஞராகவும், தேவார ஓதுவார் முதலிய பணிகளில் சேர அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மாணவர்கள் இசை கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், பகுதி நேரமாக இசை மற்றும் பரதநாட்டியம் வகுப்புகள் நடத்துவதன் வாயிலாக சுயதொழில் முனைபவர்களாக செயல்பட்டு, பொருளாதார அடிப்படையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகவே இசை ஆர்வமுள்ள மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story