அரசு துறை செயலாளர்கள் மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டும்; முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்


அரசு துறை செயலாளர்கள் மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டும்; முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
x

அரசு துறை செயலாளர்கள் மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமை திட்டங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 13-ந் தேதி அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றும் சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய ஆய்வு கூட்டமானது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு முக்கியமான திட்டங்களை அறிவித்து, அவற்றை நாம் செயல்படுத்தி வருகிறோம்.

அவற்றில் உங்களது ஈடுபாடும், பங்களிப்பும் பாராட்டுக்குரியது. அதே சமயம் புதிய திட்டங்கள் ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நிறைவு செய்வதில்தான் நம்முடைய திறமை இருக்கிறது.

முக்கிய கடமை

இன்றைய கூட்டத்தில் சில குறிப்பிட்ட துறைகளில், சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்கநிலை காணப்படுவது குறித்து பேசி இருக்கிறோம். அதற்கான காரணங்களை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது உங்களது முக்கிய கடமையாகும்.

எந்த துறையின் திட்டமாக இருந்தாலும், அது மக்களை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது. சமூக பொருளாதார குறியீட்டில், தமிழ்நாடு தேசியளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தலைசிறந்து விளங்கும் வகையில் இந்த திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

இந்த திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தினால், நிச்சயமாக நமது மாநிலம் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் ஒளிரக்கூடிய வகையில் அமையும். எந்த திட்டமாக இருந்தாலும், அந்த திட்டத்தைத் தொடங்கும்போது இருக்கிற ஆர்வம், அதனை நிறைவேற்றி முடிப்பது வரை இருக்க வேண்டும்.

முத்திரை திட்டங்கள்

மக்களைச் சென்றடையும் திட்டங்களை "முத்திரைத் திட்டங்கள்" என துறைவாரியாக தொகுத்து, அவற்றின் முன்னேற்றத்தையும் கடந்த மாதம் உங்களுடன் விவாதித்தேன். தலைமைச் செயலகத்தோடு ஆய்வுகளை நிறுத்திக்கொள்ளாமல், "கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற பயணத்தையும் மேற்கொண்டு வருகிறேன்.

இந்த ஆய்வுகளின்போது, அரசின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் பொதுவான நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சில நிகழ்வுகளில், கள அளவில் இன்னும் கவனம் தேவை என்பதை அறிய முடிந்தது. மக்கள் என்னிடம் நேரடியாக அளிக்கும் மனுக்களிலும் அத்தகைய எதிர்பார்ப்பை அறிய முடிந்தது.

அதனால்தான் முன்னுரிமைத் திட்டங்கள் என்ற வகையில் தற்போது செயல்பாட்டில் உள்ள மிக முக்கியமான திட்டங்களைத் துறைவாரியாக தொகுத்து, அவற்றின் தற்போதைய முன்னேற்றத்தை அறியும்நோக்கில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை

அரசு செயலாளர்களைப் பொறுத்தவரையில், உங்களது துறை அலுவலர்களின் பணியினை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்களைச் சந்திக்க வேண்டும். உண்மைகளை அறிய வேண்டும். அப்போதுதான் இந்த கூட்டத்தின் நோக்கமானது முழுமையடையும்.

நமக்கு மட்டும் மிகச்சிறந்த நோக்கங்கள் இருந்தால் போதாது. அவை திட்டங்களைச் செயல்படுத்தும் அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்படும்போதுதான், அந்த திட்டங்களின் நோக்கமும் நிறைவேறும். பயனும் முழுமையாக மக்களுக்கு கிடைக்கும்.

அதனை நீங்கள் கவனத்தில் கொண்டு பணியாற்றிட வேண்டும். மேலும், நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது.


Next Story