அரசு பஸ்-லாரி மோதல் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
உளுந்தூர்பேட்டை
அரசு பஸ்
பெங்களூரூவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் திட்டக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. திட்டக்குடியை சேர்ந்த தங்கவேல்(வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டினார்.
ஆசனூர் சிட்கோ பகுதியில் உள்ள ஒருவழிச்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்தபோது எதிரே பெரம்பலூாில் இருந்து அரக் கோணம் நோக்கி வந்த லாரிமீது அரசு பஸ் மோதியது. மோதிய வேகத்தில் லாரி மற்றும் பஸ்சின் முகப்பு பகுதி உருக்குலைந்தது.
8 பேர் படுகாயம்
மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவர் தங்கவேல், கண்டக்டர் தேவேந்திரன்(வயது 54), பயணிகள் திட்டக்குடியை சேர்ந்த இந்திராகாந்தி(58), நீலாவதி(50), மோகன்(55), பெரம்பலூர் ராஜேந்திரன்(55), பெங்களூரு பகுதியை சேர்ந்த சந்துரு(25) மற்றும் லாரி கிளீனர் அஜித்(22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பஸ் ஆசனூரில் இருந்து மாவிடந்தல் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக குறுகிய நேரத்தில் செல்வதற்காக ஆனனூர் சிட்கோவில் உள்ள ஒருவழிப்பாதையில் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.