அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்-சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்-சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணை பொது செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார். மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு தொடங்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் மயில் மாநாட்டிற்கான கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு நிறைவுறையாற்றினார். முடிவில் மாநில பொருளாளர் மத்தேயு நன்றி கூறினார். மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து வந்து இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேர தமிழ்நாடு அரசு தனி இடஒதுக்கீடை 15 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி படிப்பில் சேரும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கும் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளையும் உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் விதத்தில் அவர்களுக்கும் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.