சப்தகன்னிகள் சிலை கண்டெடுப்பு
கும்பகோணத்தில் புதர்களுக்கிடையே சிக்கியிருந்த சப்தகன்னிகள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் புதர்களுக்கிடையே சிக்கியிருந்த சப்தகன்னிகள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருப்பணி
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் கோபிநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.மேலும் கோவில் தொடர்பான எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் போது அங்குள்ள புதர்களுக்கிடையே கலைநயத்துடன் கூடிய தவ்வை, பிரம்மி, வராஹி உள்ளிட்ட சப்த கன்னிகள் சிலையும், முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள 8 சிலைகள் இருப்பது தெரிய வந்தது.
பூஜை செய்தனர்
இந்த சிலைகளை மீட்டெடுத்த கோவில் பணியாளர்கள் சுத்தப்படுத்தி அருகில் இருந்த பகுதியில் சிலைகளை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் கிராம மக்கள் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் சிலைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.