தீபாவளி பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. இதற்காக முந்தைய நாள் இரவிலேயே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் சிவந்திபட்டி, இட்டேரி, வள்ளியூர், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், செய்துங்கநல்லூர், கயத்தாறு, மற்றும் தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சந்தையில் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24- ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மேலப்பாளையம் சந்தை நடந்தது. இதில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் வியாபாரிகள் பலர் திரண்டனர். சிறிய ஆட்டுக்குட்டிகள் ரூ.3 ஆயிரம் முதல் விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு கால்நடை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆடுகளை வாங்க வந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இறைச்சி வியாபாரம் நன்றாக இருக்கும். இதனால் விலையைப் பற்றி கவலைப்படாமல் ஆடுகளை வாங்கி செல்கிறோம் என்றார்.