குளு, குளு சீசனை விரட்டியடித்த சூரியன்


குளு, குளு சீசனை விரட்டியடித்த சூரியன்
x

கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை விரட்டியடிக்கும் வகையில் சூரியன் சுட்டெரித்தது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று பகலிலும் வெயில் சுட்டெரித்தது.

கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி வானியல் ஆராய்ச்சி மையப்பகுதியில் அதிகபட்சமாக 20.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று ஆய்வக முதன்மை விஞ்ஞானி எபினேசர் தகவல் தெரிவித்தார். மேலும் நேற்று வழக்கத்துக்கு மாறாக பிற்பகல் வேளையில் மலைப்பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் நிலையில், கொடைக்கானலில் இந்த ஆண்டு முதன் முதலாக அதிக அளவு வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பகலெல்லாம் பவனி வந்து சுட்டெரித்த சூரியன், அந்தி சாயும் வேளையில் விண்ணில் மறையும் காட்சி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மாலை நேரத்தில் லேசான குளிர் காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக மீண்டும் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story